For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for மாற்கு நற்செய்தி.

மாற்கு நற்செய்தி

புனித மாற்கு, 16ம் நூற்றாண்டு இரஷ்ய திருவோவியம்

மாற்கு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள இரண்டாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மாற்கு எழுதிய நற்செய்தி, κατὰ Μᾶρκον εὐαγγέλιον (Kata Markon Euangelion = The Gospel according to Mark) என்பதாகும்.

மற்ற நற்செய்தி நூல்களான மத்தேயு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels)[2] என்று அழைக்கப்படுவதும் உண்டு.

நூலின் ஆசிரியரும் நூல் எழுந்த பின்னணியும்

[தொகு]

மாற்கு நற்செய்தி என இந்நூல் அறியப்பட்டாலும், இதை எழுதியவர் மாற்கு என்பது மரபு. ஆயினும் அவர் யார், அவரைப் பற்றிய பிற தகவல்கள் உளவா என்னும் கேள்விகளுக்கு உறுதியான பதில் இல்லை என்பதே பெரும்பான்மை அறிஞரின் கருத்து.

மாற்குவின் பெயரால் வழங்கப்படும் இந்நற்செய்தி நூலுக்கும் திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் குறிப்பிடப்படுகின்ற யோவான் மாற்கு என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் (காண்க: திப 12:12, 25) என்று பலர் கருதுகின்றனர். அதுபோலவே உரோமையில் பேதுருவுக்குத் துணையாக இருந்த மாற்கு என்பவருக்கும் மாற்குவின் பெயரைக் கொண்டுள்ள நற்செய்தி நூலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், கிறித்தவ மரபுப்படி, இன்று மாற்கு நற்செய்தி என அழைக்கப்படும் நூலின் ஆசிரியர் மாற்கு ஆகும். அப்பெயர் எந்த மாற்குவைக் குறிக்கிறது என நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் மாற்கு நற்செய்தி என்பதே இந்நூலின் பெயராக நிலைத்துள்ளது.

மாற்கு நற்செய்திக்கும் உரோமைக்கும் தொடர்பு உண்டு என்பது பண்டைய மரபிலிருந்து அறியக்கிடக்கின்றது. அது இந்த நற்செய்தியின் உள்ளடக்கத்திலிருந்தும் தெரியவருகிறது. அந்நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட சமூகம் இடர்பாடுக்கு உள்ளாகி இருந்தது எனவும், வெளியிலிருந்து துன்புறுத்தப்பட்டது எனவும் தெரிகிறது. பிற வரலாற்று ஆதாரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முதல் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த கிறித்தவ சமூகம் நீரோ மன்னனாலும் அவனுக்குப் பின் வந்தோராலும் துன்புறுத்தப்பட்டது.

யூதரல்லாத பிற இனத்தவர், கிறித்தவர்களாக மாறி ஒரு சமூகமாக உருவாகியிருந்த நிலையில், இந்நற்செய்தி அவர்களுக்கு எழுதப்பட்டது எனத் தெரிகிறது. எனவே, நற்செய்தியாளர், யூத பழக்க வழக்கங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் ஆங்காங்கே தருகிறார். எடுத்துகாட்டாக, மாற்கு 7:3-4ஐக் கூறலாம். அங்கு, யூதர்கள் உணவருந்துவதற்கு முன் தங்கள் மூதாதையரின் மரபைப் பின்பற்றித் தம் கைகளைக் கழுவினர் என்பதற்கு விளக்கம் தருகிறார். இதுவும் மாற்கு நற்செய்திக்கும் உரோமைக்கும் உள்ள தொடர்புக்குச் சான்றாகிறது.

மாற்கு நற்செய்தி ஒருவேளை கலிலேயாவில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும், கி.பி. 70ஆம் ஆண்டில், உரோமைத் தளபதி (பின்னாள் பேரரசன்) தீத்துவின் காலத்தில் எருசலேம் திருக்கோவில் உரோமையரால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சியோடு தொடர்புடையதாகலாம் எனவும் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மாற்கு நற்செய்தி கி.பி. சுமார் 70ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர் பெரும்பான்மையோர் முடிவுசெய்துள்ளனர்.

மாற்கு என்று அழைக்கப்படுபவர் முதல் நற்செய்தியை எழுதினார் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் பொதுப்பணி பற்றியும் பாடுகள் சாவு பற்றியும் அமைந்திருந்த பல கூற்றுத்தொடர்களை இணைத்து ஒருங்குவித்துக் கோவையான ஒரு பெரும் கூற்றுத்தொடராக இந்நூலை மாற்கு வடிவமைத்தார் என்பதே பொருள். ஏற்கனவே வழக்கிலிருந்த வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மூலங்களைப் பயன்படுத்தி மாற்கு இந்நூலை வடித்தார். நாசரேத்து இயேசு பற்றி வழக்கிலிருந்த பல கூற்றுத்தொடர்களைத் தொகுத்து, ஒரு மையக் கருவும் அமைப்பு வரைவும் அளித்து, இசைவான விதத்தில் ஒழுங்குபடுத்தியவர் அவரே.

மேற்கூறியது இலக்கிய வகை சார்ந்த செயல் என்றால், மாற்கு தமது நூலைப் பெறவிருந்த கிறிஸ்தவ சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும் நற்செய்தி நூலைத் தொகுத்தார். ஏனென்றால், உரோமையில் வாழ்ந்த அந்தப் பிற இன-கிறிஸ்தவ சமூகம் துன்பத்துக்கு ஆளாகியிருந்தது; அந்த இக்கட்டான சூழமைவில் அச்சமூகத்துக்கு இயேசுவை முன்னுதாரணமாக இந்நற்செய்தி காட்டுகிறது. எவ்வாறு இயேசு இறுதிவரை நிலைத்துநின்றாரோ, அதுபோல மாற்குவின் கிறிஸ்தவ சமூகமும் துன்பச் சூழலில் துவண்டுவிடாமல் நிலைநிற்க வேண்டும்; ஏனென்றால் தம் சிலுவைச் சாவின் வழியாக இயேசு மக்களுக்கு மீட்புக் கொணர்ந்துவிட்டார்.

மாற்கு நற்செய்திக்கு ஆதாரங்கள்

[தொகு]

மாற்கு நற்செய்தி உருவாவதற்கு முன்னரே இயேசு பற்றிய வலுவான ஒரு மரபு வழக்கு இருந்தது. அந்த மரபிலிருந்து மாற்கு பல கருத்துத் தொடர்களைப் பெற்றார். இயேசு மக்களுக்கு ஞானம் போதித்த ஆசிரியர், வல்லமையோடு புதுமைகள் பல செய்த செயல்வீரர், இயேசுவின் சிறப்புப் பெயர்கள் மானிட மகன், தாவீதின் மகன், கடவுளின்; மகன், மெசியா, ஆண்டவர் போன்றவை - இவை மாற்குவுக்கு மரபிலிருந்து கிடைத்தவை ஆகும்.

அதுபோலவே, இயேசுவின் பாடுகள், சாவு பற்றியும் ஒரு கூற்றுத்தொடர் மாற்குவுக்குக் கிடைத்திருக்க வேண்டும். அதில் இயேசு நீதிக்காகத் துன்புறும் ஊழியன் எனவும் அவ்விதத்தில் பழைய ஏற்பாட்டுப் பின்னணியில், குறிப்பாக 22ஆம் திருப்பாடலின் பின்னணியில் இயேசுவின் சாவைப் புரியவேண்டும் என்பதும் மாற்குவுக்கு முன்னைய மரபிலிருந்து கிடைத்திருக்கலாம்.

இத்தகைய கூற்றுத்தொடர்களையும் கருத்துத் கோவைகளையும் இணைத்து இயேசுவின் பொதுப்பணி பற்றி ஒரு விரிவான கூற்றுத்தொடரை மாற்கு கட்டமைத்தார். சுவைமிகுந்த ஒரு கதைபோல அவர் இயேசு பற்றி எடுத்துரைக்கிறார்.

மாற்கு கூறும் இயேசுவின் கதை

[தொகு]

நூலின் தொடக்கத்திலேயே இயேசு பற்றிய மையச் செய்தியை மாற்கு வாசகர்களுக்குத் தருகிறார் (காண்க மாற் 1:1-13). இப்பகுதியில், இயேசு திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எனவும், இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் எனவும், அவர் சாத்தானின் சோதனையை முறியடித்து வெற்றிவாகை சூடினார் எனவும் மாற்கு தெளிவுபடுத்துகிறார்.

நற்செய்தியின் கதைக் கருவையும் அமைப்பையும் கதையின் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஓர் உச்சக்கட்டத்தை எட்டுவதையும் படிப்படியாக மாற்கு புவியியல் மற்றும் இறையியல் அடிப்படையில் விளக்குகிறார்.

கீழே மாற்கு நற்செய்தியின் இரு பெரும் பிரிவுகள் விளக்கப்படுகின்றன.

மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவு

[தொகு]

மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவில் (மாற் 1:14-8:21) இயேசுவின் வாழ்வோடு இணைந்து கலிலேயாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இப்பிரிவின் முதல் அலகு மாற்கு 1:14-3:6 ஆகும். அங்கே இயேசு முதல் சீடர்களை அழைக்கிறார் (மாற் 1:16-20); வலிமை வாய்ந்த விதத்தில் மக்களுக்குக் குணமளிக்கிறார்; ஞானத்தோடு மக்களுக்குப் போதிக்கிறார்; எதிரிகள் விரிக்கும் வலையில் விழாமல் அவர்களை முறியடிக்கிறார் (மாற் 1:21-3:6).

ஆனால், இரண்டாம் அலகு வேறுவிதமாகப் போகிறது (மாற் 3:7-6:6). இங்கே இயேசு மக்களால் புறக்கணிக்கப்படுவது காட்டப்படுகிறது. அவருடைய போதனையையும் குணமளிக்கும் செயல்களையும் பார்த்து மக்களில் சிலர் சாதகமாகவும் சிலர் எதிர்ப்பாகவும் மறுமொழி தருவதை மாற்கு விவரிக்கிறார் (மாற் 3:7-35). இவ்வாறு மக்கள் செயல்பட்டதால் இயேசு உவமைகள் வழி கடவுளின் அரசு பற்றி அறிவித்து, அந்த சாதகமான அல்லது எதிர்ப்பான மறுமொழி பற்றிக் கதைகள் வழி போதிக்கிறார் (மாற் 4:1-34). சீறிட்டெழுந்த புயலை அடக்கியும், பேய்களை விரட்டியும், நோய்களைப் போக்கியும், சாவை முறியடித்தும் இயேசு தம் வல்லமையைக் காட்டியபோதிலும் (மாற் 4:35-5:43), அவரது சொந்த ஊர் மக்களே அவரைப் புறக்கணிக்கின்றனர் (மாற் 6:1-6).

மூன்றாம் அலகு (6:7-8:21) இயேசு சீடர்களை அனுப்புவதை விவரிக்கிறது. அவர்கள் இயேசுவின் பணியில் பங்கேற்று அவரது பணிக்குத் தயாரிப்பு செய்ய அனுப்பப்படுகின்றனர் (மாற் 6:7-13). ஆனால் சீடரோ இயேசு யார் என்பதை அறியத் தவறுகிறார்கள்; அவரது போதனையையும் சரியாகப் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள் (மாற் 8:14-21). திருமுழுக்கு யோவானின் சாவு இயேசுவின் சாவுக்கு முன்மாதிரியாகிறது (மாற் 6:14-29). இயேசு பல வல்ல செயல்களை ஆற்றுகின்றார்: ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக உணவளிக்கிறார் (6:30-44); தண்ணீர் மீது நடக்கின்றார் (மாற் 6:45-52); வேறு பல புதுமைகள் நிகழ்த்துகின்றார் (மாற் 6:53-56). சடங்குமுறையான தீட்டுப் பற்றியும் தூய்மை பற்றியும் தம் எதிரிகளோடு விவாதம் செய்கிறார் (மாற் 7:1-23). அதன்பின், இன்னும் பல அதிசய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. தூய்மையற்ற பகுதியாகக் கருதப்பட்ட கனானிய நாட்டிலிருந்து வந்த பெண்ணின் மகளைக் குணப்படுத்துகின்றார் (மாற் 7:24-30); காது கேளாத ஒருவருக்கு நலமளிக்கிறார் (மாற் 7:31-37); நாலாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு தருகின்றார் (மாற் 8:1-10). இதைத் தொடர்ந்து வானத்திலிருந்து அடையாளம் கேட்ட பரிசேயரோடு இயேசு வாதத்தில் ஈடுபடுகிறார் (மாற் 8:11-13). ஆனால், இறுதியில் இயேசுவோடு நெருக்கமாகப் பழகிய அவரது சீடர்களே அவரைப் புரிந்துகொள்ளவில்லை. இதனால் இயேசு மன வருத்தமுறுகிறார் (மாற் 8:14-21).

மாற்கு நற்செய்தியின் இரண்டாம் பிரிவு

[தொகு]

மாற்கு விவரிக்கும் இயேசு கதையின் இரண்டாம் பெரும் பிரிவு 8:22இலிருந்து தொடங்கி 16:8ல் முடிகிறது. இப்பிரிவின் முதல் அலகு (மாற் 8:22-10:52) இயேசு தம் சீடரோடு எருசலேமை நோக்கிப் பயணம் செல்வதை விவரிக்கிறது. அப்போது இயேசு சீடர்களுக்குத் தாம் யார் என்பது பற்றி அறிவுறுத்துகிறார். அவரைப் பின் செல்வதற்கான நிபந்தனைகளை விளக்குகிறார். இந்த அலகின் தொடக்கத்திலும் (மாற் 8:22-26) இறுதியிலும் (10:46-52) இயேசு பார்வையற்றோருக்குப் பார்வையளிக்கும் செயல் விவரிக்கப்படுகிறது. இதில் நிச்சயமாக ஓர் உட்பொருள் இருக்கிறது. அதாவது, இயேசுவின் சீடர்கள் பார்வையற்றோர்போல இருந்தார்கள்; இயேசு யார் என்பதை அவர்களது அகக் கண்கள் காணத் தவறிவிட்டிருந்தன. இயேசு படிப்படியாக அவர்களுடைய கண்களைத் திறக்கின்றார்.

இயேசு பார்வையளிக்கும் இரு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று சிறு பிரிவுகள் உள்ளன (மாற் 8:27-9:29; 9:30-10:31; 10:32-45). இங்கு இயேசு தாம் பாடுபட்டு இறக்கப்போவதை முன்னறிவிக்கிறார்; ஆனால், சீடர்களோ இயேசுவின் சொற்களைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு, தாம் யார் என்பதையும், தம்மைப் பின்செல்ல விரும்புவோர் துன்பப்படத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் சீடருக்கு விளக்கிச் சொல்கின்றார்.

இரண்டாம் பிரிவின் இரண்டாம் அலகு (11:1-16:8) இயேசு எருசலேமில் பாடுகள் பட்ட நிகழ்ச்சியையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. அந்த ஒரு வார காலத்தில் நிகழ்ந்ததை மாற்கு படிப்படியாக எடுத்துரைக்கிறார். முதல் நாட்களில் நடந்த நிகழ்வுகள் இவை (11:1-13:37): இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகிறார்; எருசலேம் திருக்கோவிலுக்குப் போகிறார் (மாற் 11:1-11); அங்கு ஓர் இறைவாக்கினரைப் போலப் போதிக்கிறார் (11:12-19); அவருடைய எதிரிகளோடு வாதத்தில் ஈடுபடுகிறார் (11:20-12:44); எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (மாற் 13:1-37).

இயேசுவின் பாடுகள் பற்றிய கூற்றுத்தொடர் மாற்கு 14:1-16:8 பகுதியில் உள்ளது. அதில் இயேசுவின் சாவுக்கு முன் ஒரு பெண் இயேசுவின் மேல் நறுமண எண்ணெய் பூசிய நிகழ்ச்சியோடு, இயேசுவின் இறுதி இரா உணவும் விளக்கப்படுகிறது (மாற் 14:1-31); பின் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டலில் ஈடுபடுகிறார்; அதைத் தொடர்ந்து இயேசு கைதுசெய்யப்படுகிறார் (மாற் 14:32-52); தலைமைக் குருவின் முன்னிலையிலும், தலைமைச் சங்கத்தின் முன்னிலையிலும், உரோமை ஆளுநராகிய பிலாத்துவின் முன்னிலையிலும் இயேசு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் (மாற் 14:53-15:15); இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விடுகிறார்; கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார் (மாற் 15:16-47)ஃ வாரத்தின் முதல் நாள் இயேசுவின் கல்லறை வெறுமையாயிருப்பதைச் சீடர்கள் காண்கிறார்கள் (மாற் 16:1-8).

மாற்கு நற்செய்தியின் இறுதிப் பகுதி (மாற் 16:9-20) உயிர்ப்புக்குப் பின் இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளின் சுருக்கமாக அமைந்துள்ளது. இப்பகுதி கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது விவிலிய அறிஞர் கருத்து.

மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம்.

மாற்கு நற்செய்தி

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
பகுதி 1: முன்னுரை 1:1-13 64
பகுதி 2: இயேசுவே மெசியா

1. இயேசுவும் மக்கள் கூட்டமும்
2. இயேசுவும் சீடர்களும்
3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்
4. இயேசு மெசியா என்னும் அறிக்கை

1:14 - 8:30

1:14 - 3:6
3:7 - 6:6அ
6:6ஆ - 8:26
8:27-30

64 - 79

64 - 68
68 - 73
73 - 79
79

பகுதி 3: இயேசுவே மானிடமகன்

1. பயணம் செய்யும் மானிடமகன்
2. எருசலேமில் மானிடமகன்
3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல்

8:31 - 16:8

8:31 - 10:52
11:1 - 13:37
14:1 - 16:8

79 - 98

79 - 85
85 - 92
92 - 98

பகுதி 4: முடிவுரை 16:9-20 99

மாற்கு நற்செய்தியில் வரும் கதா பாத்திரங்கள்

[தொகு]

1. இயேசு

[தொகு]

இந்த நற்செய்தியின் முக்கிய கதாபாத்திரம் இயேசு கிறிஸ்து என்பதில் ஐயமில்லை. நூலின் தொடக்கத்திலேயே இயேசு கடவுளின் மகன் என மாற்கு அடையாளம் காட்டுகிறார் (மாற் 1:1). இயேசு ஞானத்தைப் போதித்த ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், நோய்களிலிருந்து மக்களை விடுவித்த மாபெரும் நலமளிப்பவராகவும் காட்டப்படுகிறார் எனினும், இயேசு உண்மையிலேயே யார் என்பது அவரது சாவின்போதுதான் முழுமையாக வெளிப்படுகிறது. இதை விவிலிய அறிஞர் மெசியா இரகசியம் (Messianic Secret)[3] என அழைப்பர். அதாவது, மெசியா என்றால் வலிமைமிக்க ஓர் அரசனைப் போல இவ்வுலகில் வந்து உரோமையரின் ஆட்சியைக் கவிழ்த்து, இசுரயேலை விடுவிப்பார் என்று மக்கள் நினைத்திருந்த பின்னணியில் இயேசு தம்மை மெசியா என்று அடையாளம் காட்டவில்லை.

இயேசு இவ்வுலகப் பாணியில் மாட்சியோடும் மகிமையோடும் வரும் மெசியா அல்ல, மாறாக, துன்புற்று, சிலுவையில் குற்றவாளிபோல் அறையப்பட்டு உயிர்துறக்கும் மெசியா. அவ்வாறு உயிர்துறக்கும்போது அவர் மெசியா என்பது உலகறிய அறிவிக்கப்படுகிறது. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டு உயிர்துறந்த வேளையில், நூற்றுவர் தலைவர், இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் என்று அறிக்கையிடுகிறார் (மாற் 15:39). மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட நிலையில், பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த பணியை நிறைவேற்றுவதிலேயே முனைந்து நிற்கின்றார். அவரது பணி நோக்கு என்னவென்பதை அவரே அறிவித்திருந்தார்: மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்காகவும் வந்தார் (மாற் 10:45). இவ்விதம் அவர் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினார் (மாற் 14:36).

2. சீடர்கள்

[தொகு]

இயேசுவை உயிரோட்டத்தோடு சித்தரிக்கும் மாற்கு இயேசுவின் சீடர்களது குணநலன்களையும் கருத்தாக விவரிக்கிறார். தொடக்கத்தில் சீடர்கள் மிகுந்த உற்சாகத்தோடுதான் இயேசுவின் அழைப்பை ஏற்றனர்; அவரைப் பின்செல்லத் தொடங்கினர் (மாற் 1:16-20). இயேசுவோடு இருக்கவும் அவரது பணியில் பங்கேற்றுக் கடவுளின் ஆட்சி பற்றிப் போதிக்கவும், நோயாளரைக் குணப்படுத்தவும் ஆர்வத்தோடுதான் முன்வந்தனர் (மாற் 3:14-15). அந்தத் தொடக்கக் கட்டத்தில் இயேசுவின் சீடர் நல்ல எடுத்துக்காட்டாகவே இருந்தனர். ஆனால் நிகழ்வுகள் தொடரத் தொடர, அச்சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். இது எவ்வளவு தூரம் போய்விட்டதென்றால், இயேசு கலிலேயப் பணியை முடிவுக்குக் கொணரும் வேளையில் சீடரைப் பார்த்து, உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?...இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா? என்று கூட கேட்கவேண்டியதாயிற்று (மாற் 8:17, 21).

பின்னர், இயேசுவும் சீடரும் எருசலேம் நோக்கிப் பயணமான போது, இயேசு தாம் பாடுபடப் போவதாக மூன்று முறை கூறிய பிறகும் ஒவ்வொரு வேளையிலும் அவரது கூற்றைச் சீடர் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள் (மாற் 8:31;9:31; 10:33-34). இயேசு அவர்களது தவறான கருத்தைத் திருத்தவேண்டியதாகிறது. மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அறிவுபுகட்ட வேண்டிய தேவை எழுகிறது. இயேசு பாடுபட வேண்டிய வேளை வந்ததும், சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போகிறார்கள். அப்போது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர் என மாற்கு வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் (மாற் 14:50). இத்தனைக்கும், தம்மைக் கைதுசெய்து துன்புறுத்துவார்கள் என இயேசு பலதடவை சீடருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கும் மேலாக, சீடர்கள் நடுவே தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த பேதுரு தம் குருவாகிய இயேசுவை ஒருமுறை அல்ல, மூன்று முறை மறுதலிக்கிறார் (மாற் 14: 66-72). இவ்வாறு, படிப்படியாக சீடர்கள் நலமான முன்மாதிரியிலிருந்து நலமற்ற முன்மாதிரியாகி;விடுகிறார்கள்; அறிவு மழுங்கியவர்களாக, கோழைகளாக மாறிவிடுகிறார்கள்; ஆனால் இயேசுவோ துன்பங்கள் நடுவேயும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நிலைத்துநின்று நலமான முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

3. எதிரிகள்

[தொகு]

இயேசுவின் எதிரிகளையும் மாற்கு திறம்படச் சித்தரித்துள்ளார். கலிலேயாவில் பொதுப்பணி ஆற்றியபோதும், எருசலேம் நோக்கிப் பயணம் மேற்கொண்ட போதும், எருசலேம் நதரிலும் இயேசு பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். முதல் கட்டத்தில் இயேசுவின் போதனையையும் அவரது குணமளிக்கும் செயலையும் ஏற்க மறுத்தவர்கள் பரிசேயரும் ஏரோதியரும் ஆவர் (மாற் 3:6). தொடர்ந்து, இயேசுவின் போதனையையும் நலமளிக்கும் அதிசய செயல்களையும் ஏற்க மறுத்து, ஐயுற்றவர்கள் அவரது சொந்த ஊரைச் சார்ந்த மக்கள். இது இயேசுவுக்கே பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற் 6:6). இயேசுவின் கலிலேயப் பணியின் இறுதிக் கட்டத்தில் அவரை நெருங்கிப் பின்பற்றி, அவரோடு இருந்து பழகிய அவரது சீடரே அவரைத் தவறாகப் புரியும் அளவுக்கு நிலைமை போய்விட்டிருந்தது (மாற் 8:14-21).

எருசலேமுக்கு வந்ததும் இயேசு யூதேய தலைமை அதிகாரிகளின் வெவ்வேறு பிரிவினரோடு விவாதத்தில் ஈடுபடுகிறார். இவர்கள் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், பரிசேயர்கள், ஏரோதியர், சதுசேயர் போன்றோர் ஆகும் (மாற் 11:27-12:44).

இயேசுவின் பாடுகள் பற்றிய காட்சி தொடங்கவிருக்கிறது. இந்தக் காட்சிக்குத் தயாரிப்பாக மாற்கு இயேசுவின் எதிரிகள் செய்யும் சூழ்ச்சியை விவரிக்கிறார். தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞரும், இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து என்பவரோடு இணைந்து சதித்திட்டம் தீட்டுவதில் ஈடுபடுகிறார்கள் (மாற் 14:1-2, 10-11). இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லும் நிகழ்ச்சிக்கு முன்நிகழ்வாக தலைமைக் குருக்கள், மூப்பர்கள், யூதர்களின் தலைமைச் சங்கம் ஆகியோரை உள்ளடக்கிய யூத அதிகாரிகளும், உரோமை ஆளுநராகிய பொந்தியு பிலாத்துவும் அவருக்குக் கீழிருந்த போர்வீரர்களும் இணைந்து செயல்படுவதாக மாற்கு காட்டுகிறார்.

இயேசுவுக்கு எதிரிகளாக இருந்த இவர்கள் எல்லாரும் இயேசு வழங்கிய செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை; மாறாக, அவருக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இதை மாற்கு மிகத் தத்ரூபமாக எடுத்துரைக்கிறார்.

மாற்கு நற்செய்தியின் இறையியல்

[தொகு]

மேலே, மாற்கு நற்செய்தியில் வரும் கதாபாத்திரங்களை அவர் சித்தரிக்கும் முறையும் கதைக் கருவை அவர் நளினமாகக் கட்டவிழ்ப்பதும் சிறிது விளக்கப்பட்டது. இந்த இலக்கியப் பாணியை நாம் புரிந்துகொண்டால் மாற்கு நற்செய்தியில் காணும் இறையியல் பார்வையையும் சிறிது ஆழமாக அறிந்திட இயலும்.

இயேசு யார்?

[தொகு]

யார் இந்த இயேசு? - இந்தக் கேள்வி மாற்குவுக்கு முக்கியமானது. இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் நற்செய்தி முழுவதுமே அமைந்துள்ளது என்றுகூடச் சொல்லலாம். இயேசுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புப் பெயர்கள் மாற்குவின் சமூகத்திற்கு ஏற்கனவே தெரிந்திருந்தன. அவை மானிடமகன், தாவீதின் மகன், இறைமகன், மெசியா, ஆண்டவர் போன்றவை ஆகும். எனவே இயேசு கடவுளின் ஆட்சியை அறிவிக்க வந்தார் என்பதை எடுத்துக் கூறுவதில் மாற்கு கவனத்தைச் செலுத்துகிறார். "யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்" (மாற் 1:14-15).

இயேசுவின் பொதுப் பணிக் காலம் முழுவதும் அவர் அதிகாரத்தோடு போதிப்பதைப் பார்க்கிறோம். வல்லமையோடு புதுமைகள் பல நிகழ்த்துவதையும் காண்கின்றோம். என்றாலும், இயேசுவின் பணியை வரையறுக்கும் இந்த அம்சங்களை நாம் அவரது சிலுவைச் சாவின் ஒளியில்தான் சரிவரப் புரிந்துகொள்ள முடியும். இயேசு மெசியா என்பது அவரது பாடுகள், மரணம் ஆகியவற்றின் ஒளியில்தான் தெளிவுபெறுகிறது. இந்த விதத்தில் மெசியா உண்மையில் யார் என்பதை மாற்கு கூறும் இயேசுவின் வரலாற்றுக் கதை நமக்கு ஐயமற விளக்குகிறது.

இயேசுவைப் பின்செல்வது எப்படி?

[தொகு]

இயேசுவைப் பின்செல்வது என்பதன் பொருள் என்ன? இதை இயேசுவின் பன்னிரு சீடர் நடந்துகொண்ட பின்னணியில் மாற்கு விளக்குகிறார். சீடர்களை இயேசு அழைத்ததும் அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு, மிகுந்த உற்சாகத்தோடு அவர் பின்னே சென்றனர் (மாற் 1:16-20).

சீடர் இயேசுவோடு இருந்தனர்; இயேசுவின் பணியில் பங்கேற்று, அப்பணியைத் தொடர அவரால் அனுப்பப்பட்டனர் (மாற் 3:14-15). ஆனால் இயேசுவின் சீடர் இயேசுவைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது பார்வை மழுங்கியதுபோல் ஆயிற்று. எனவே, நலமான ஒரு முன்மாதிரியாக இல்லாமல் அவர்கள் நலமற்ற, தவிர்க்க வேண்டிய, பின்பற்றத் தகாத வழிகாட்டிகளாக மாறுகின்றனர். இதனால் நற்செய்தி வாசகர்களுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இருக்கும் இடைவெளி வெகுவாக அதிகரிக்கிறது.

நற்செய்தி நூலின் முதல் பகுதியில் வாசகர் தம்மைச் சீடரோடு எளிதில் ஒன்றுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், கதை தொடரத் தொடர, சீடரை விட்டு விலகிப்போய், இயேசுவையே நமது நல்ல முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள மாற்கு இட்டுச்செல்கிறார்.

பெண் சீடர்கள்

[தொகு]

பன்னிரு சீடரும் அளிக்கின்ற பின்பற்றத் தகாத முன்மாதிரிக்கு நேர் எதிராக உள்ளது நற்செய்தியில் வரும் பெண்களின் ஆக்கப்பூர்வமான முன்மாதிரி. பெயர் அறியப்படாத பெண் ஒருவர் இயேசுவை விலை உயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசுகிறார் (மாற் 14:3-9). இவ்வாறு, இயேசுவே மெசியா என்னும் உண்மை வெளிப்படுகிறது. ஏனென்றால், மெசியா என்னும் சொல்லுக்குப் பொருளே திருப்பொழிவு பெற்றவர் என்பதே. ஆகவே, நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றிய பெண் இயேசுவை மெசியா என அறிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசுவின் அடக்கத்திற்கு ஒரு முன்னறிவிப்பாக இப்பூசுதல் அமைந்தது என இயேசுவே கூறி அப்பெண்ணின் செயலைப் பாராட்டுகிறார் (மாற் 14:8-9).

கலிலேயாவில் இயேசுவைப் பல பெண் சீடர்கள் பின்சென்றனர் எனவும், அவர்கள் இயேசுவோடு எருசலேமுக்கு வந்தனர் எனவும் மாற்கு நற்செய்தி பின்னரே கூறுகிறது (மாற் 15:40-41). இயேசு கைதுசெய்யப்பட்டதை அறிந்ததும் கோழைகளைப் போலத் தப்பி ஓடிவிட்டனர் பன்னிரு சீடர்கள் (மாற் 14:50); ஆனால், இயேசுவைப் பின்சென்ற பெண்களோ, அவர் சிலுவையில் அறையப்பட்டுத் துன்புற்ற வேளையிலும் அவரோடு கூட இருந்தனர். அவர் இறப்பதை அவர்கள் கண்ணால் கண்டனர்; அவரைச் சிலுவையிலிருந்து இறக்கியபோதும் அவரோடு இருந்தனர்; அவரை அடக்கம் செய்த இடத்தையுடம் பார்த்தனர். இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறை வாரத்தின் முதல் நாளன்று வெறுமையாய் இருந்ததையும் பெண்கள் கண்டனர்.

இப்பெண் சீடருள் புகழ்பெற்றவர் மகதலா நாட்டு மரியா. இறந்த இயேசு உயிர்பெற்று எழுந்துவிட்டார் என்ற உண்மைக்கு இவரே முதல் சான்று. நாம் இயேசுவின் உயிர்த்தெழுதலில் இன்று நம்பிக்கை கொள்வதற்கும் இந்த மரியாவின் சாட்சியே ஆதாரமாகிறது.

கிறித்தவ வாழ்வு

[தொகு]

மாற்கு நற்செய்தியில் கிறித்தவ வாழ்வு என்பது இயேசுவின் சிலுவையோடு நெருங்கிப் பிணைந்துள்ளது. இயேசு விடுக்கும் அழைப்புக்கு ஆள்முறையில் பதில் தருவதும், அவரோடு உறவுப் பிணைப்பில் இணைவதும், அவரது பணியில் பங்கேற்பதும், கிறிததவ வாழ்வின் கூறுகளாகும். பன்னிரு சீடரும் தொடக்கத்தில் இவ்வாறே இயேசுவை ஆர்வத்தோடு பின்சென்றனர் என மாற்கு நற்செய்தி வலியுறுத்துகிறது.

கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இயேசுவே துன்பங்களுக்கு ஆளானார். அவர் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்த வேளையில், துன்பக் கிண்ணத்திலிருந்து பருகுவது தந்தையின் விருப்பம் என்றால் அவ்விருப்பம் நிறைவேறுக என்று தன்னைக் கையளித்தார்.

கிறித்தவ வாழ்வு என்பது மன உறுதியோடு பணிசெய்தலையும் உள்ளடக்கும். இயேசு இதற்கு சீரிய முன் உதாரணம் ஆனார். அவர் "பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45). அதுபோலவே இயேசுவைப் பின்சென்ற பெண் சீடர்களும் துன்பங்களுக்கு நடுவிலும் இறுதிவரை நிலைத்துநின்றனர்.

இறுதியாக, கிறிஸ்தவ வாழ்வு என்பது கடவுளின் ஆட்சி முழுமையாக வரும் என்னும் எதிர்பார்ப்போடு நாம் விழித்திருந்து செயல்படுவதையும் உள்ளடக்கும். கடவுளின் இறுதித் தீர்ப்பு எந்தக் கணத்திலும் நிகழக் கூடும் என்னும் உணர்வோடு என்றும் தயாரிப்பு நிலையில் இருப்பதுவே கிறிஸ்தவப் பண்பு. "இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்" (மாற் 13:13).

ஆதாரங்கள்

[தொகு]
  1. மாற்கு
  2. ஒத்தமை நற்செய்திகள்
  3. மெசியா இரகசியம்

உசாத்துணை

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
மாற்கு நற்செய்தி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?